ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும் என பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடி பேர் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் பணி செய்யும் ஊழியர்கள் இந்த அறிவிப்பு காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெரும் தனி நபர்களுக்கு வருமான வரி இல்லை என்ற அறிவிப்பு அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அடுத்த கட்டமாக உணவு டெலிவரி செய்யும் Swiggy, Zomato ஊழியர்களுக்கு அரசு செலவில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை வழங்குவதன் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களாக இருக்கும் இந்த ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், விபத்துகள், உடல்நலக்குறைவு போன்ற எதிர்பாராத நிகழ்வு ஏற்படும் போது உணவு டெலிவரி ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் திட்டங்கள் வகுப்பது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருவதாகவும், இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.