பீகார் மாநிலத்தைச் சேர்ந்த துலாரி தேவி பரிசாக கொடுத்த சேலையை அணிந்து, தெலுங்கு கவிதையுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை தொடங்கியுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவியை சமீபத்தில் நிதியமைச்சர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, பீகாரில் உள்ள மதுபானி கலையைப் பற்றிய எண்ணங்களை இருவரும் அன்புடன் பகிர்ந்து கொண்டனர். அப்போது, துலாரி தேவி ஒரு சேலையை பரிசாக கொடுத்த நிலையில், அந்த சேலையைதான் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
மேலும், தெலுங்கு எழுத்தாளர் குரஜாடா அப்பாரா என்பவரின் கவிதையுடன் பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் எதிர்க்கட்சிகள் அமளி செய்த நிலையில், அந்த அமளியை பொருட்படுத்தாமல் அவர் உரையை தொடர்ந்து வாசித்து வருகிறார்.
இதனால், எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில் இந்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை இன்னும் சற்று நேரத்தில் பார்ப்போம்.