ராஜஸ்தான் மாநிலத்தில் அறிவியல் ஆசிரியர் ஒருவரும், இயற்பியல் ஆசிரியர் ஒருவரும் சேர்ந்து போதைப்பொருளை உற்பத்தி செய்து ரூபாய் 15 கோடிக்கு மேல் விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர் மற்றும் பயிற்சி மையத்தில் இயற்பியல் ஆசிரியர் ஆகிய இருவரும் சேர்ந்து மெபெட்ரோன் என்ற போதைப்பொருளை உற்பத்தி செய்துள்ளனர். இதற்காகவே அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு வாடகை வீட்டில் ரசாயனங்கள் மற்றும் உபகரணங்களை வாங்கி போதைப்பொருளை உற்பத்தி செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் ஐந்து கிலோ போதைப்பொருளை உற்பத்தி செய்துள்ளதாகவும், அவற்றின் மதிப்பு 15 கோடி என்றும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நான்கு கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு பாடம் மற்றும் நல்லொழுக்கம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே போதைப்பொருளை உற்பத்தி செய்து கோடிக்கணக்கில் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.