ராஜஸ்தானில் குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மொத்தமாக தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தை சேர்ந்த சிவ்லால் மேக்வால் என்பவருக்கு கவிதா என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். சிவ்லால் மேக்வாலுக்கும் அவரது இளைய சகோதரருக்கும் குடும்ப சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சிவ்லால், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் தனது குடும்பத்திற்கென தனி வீடு கட்டிக் கொள்ள நினைத்துள்ளார். ஆனால் அதற்கு நிலம் தர முடியாது என அவரது தாயாரும், சகோதரரும் பிரச்சினை செய்துள்ளனர்.
இதனால் மனவிரக்தியில் இருந்து சிவ்லால் - கவிதா தற்கொலை முடிவை கையில் எடுத்துள்ளனர். அதற்கு முன்னதாக தங்களது இளைய மகனுக்கு பெண் போல வேடமிட்டு அழகு பார்த்த அவர்கள், அதன் பின்னர் தனது இரண்டு பிள்ளைகளையும் தண்ணீர் டேங்கில் வீசிக் கொன்றதுடன், தாங்களும் அதில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சிவ்லால் எழுதிய தற்கொலை கடிதம் போலீஸாருக்கு கிடைத்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K