ராஜஸ்தான் போலீஸ் அகாடமி வளாகத்திற்குள்ளேயே, சுமார் இரண்டு ஆண்டுகள் ஒரு பெண் போலி சப்-இன்ஸ்பெக்டராக வேடமிட்டு வலம் வந்துள்ளார். பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பது, அதிகாரப்பூர்வ சீருடை அணிவது, ஏன், மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது என அனைத்தையும் சர்வ சாதாரணமாக செய்திருக்கிறார். இந்த அதிர்ச்சியூட்டும் மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோனா புகாலியா என்ற பெண், ராஜஸ்தானின் நாகவுர் மாவட்டத்தில் உள்ள நிம்பா கே பாஸ் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு லாரி ஓட்டுநர். இவர் 2021ஆம் ஆண்டு ராஜஸ்தான் சப்-இன்ஸ்பெக்டர் ஆட்சேர்ப்பு தேர்வில் தோல்வியடைந்தார். ஆனால் "மோலி தேவி" என்ற பெயரில் போலி ஆவணங்களை உருவாக்கி, தான் ஒரு சப்-இன்ஸ்பெக்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகளை பரப்பத் தொடங்கினார்.
அதன் அடுத்த கட்டமாக, சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி அதிகாரிகளுக்கான பிரத்யேக வாட்ஸ்அப் குழுவில் அவர் இணைந்தார். மேலும், முந்தைய பேட்சை சேர்ந்த, விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட ஒரு வேட்பாளர் போல ராஜஸ்தான் போலீஸ் அகாடமியில் தன்னை பதிவு செய்துகொண்டுள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, மோனா புகாலியா தொடர்ந்து போலீஸ் அகாடமியின் அணிவகுப்பு மைதானங்களில் முழு சீருடையில் காணப்பட்டுள்ளார். அவர் வெளிப்புற பயிற்சிகளில் பங்கேற்றுள்ளார், உயர் அதிகாரிகளுடன் சாதாரணமாக புகைப்படங்கள் எடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ரீல்களையும் பதிவிட்டு, தன்னை ஒரு உண்மையான அதிகாரியாகவே வெளிப்படுத்திக் கொண்டார்.
இந்த நேரத்தில் தான் சில பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் அவரது அடையாளம் குறித்து சந்தேகங்களை எழுப்பிய நிலையில் அவர் விசாரணை செய்யப்பட்டார். விசாரணையின் போது, மோனா புகாலியா தான் போலி அடையாளத்தை மேற்கொண்டதை ஒப்புக்கொண்டார். தற்போது அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.