ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார் பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியின் கூரை இடிந்து விழுந்ததில், நான்கு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், 17 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜலாவார் பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் இன்று காலை குழந்தைகள் பள்ளிக்கு வந்துகொண்டிருந்த நிலையில், திடீரென பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் நான்கு மாணவர்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்ததாகவும், காயமடைந்த 17 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சை பெறுபவர்களில் நான்கு பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர், கூரை எப்படி இடிந்து விழுந்தது என்பதை கண்டறிய உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் இருந்து விரிவான தகவலை பெற்ற அமைச்சர், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், சிகிச்சை பெற்று வரும் மாணவர்களின் முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.
ஆனால், இந்த பள்ளியின் கூரை ஆபத்தான நிலையில் இருப்பதாக ஏற்கனவே பெற்றோர் எச்சரித்த நிலையில், தற்போது இடிந்து விழுந்து நான்கு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், அரசு பள்ளிகளின் கட்டமைப்பு பாதுகாப்பின் அவசியம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.