கோபால் கெம்கா என்ற தொழிலதிபரின் கொலை பீகாரை உலுக்கிய சில நாட்களிலேயே, நேற்று மற்றொரு தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் மணல் வியாபாரி ராமகாந்த் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாட்னாவுக்கு அருகிலுள்ள பாலிகஞ்ச் என்ற பகுதியிலுள்ள தானா கிராமத்தில், அவர் தனது வீட்டிற்கு வெளியே தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென அடையாளம் தெரியாத சில நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
குண்டடி பட்டு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்ற நிலையில் அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
ராமகாந்த் யாதவ் பல ஆண்டுகளாக மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கொலைக்கான நோக்கம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
பீகாரில் கோபால் கெம்கா, ராமகாந்த் யாதவ் என அடுத்தடுத்து இரண்டு தொழிலதிபர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.