பீகார் மாநிலத்தில் ஒரு பெண் தனது வாக்காளர் அடையாள அட்டையில் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் புகைப்படம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஒரு பெண், வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்திருந்த நிலையில், அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை சமீபத்தில் வழங்கப்பட்டது. அந்த வாக்காளர் அடையாள அட்டையை வாங்கி பார்த்த பெண்ணுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
ஏனெனில், அந்த அட்டையில் தன்னுடைய புகைப்படம் இருப்பதற்கு பதிலாக, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் படம் இருந்ததை பார்த்து தான் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்ப, அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
தேர்தல் ஆணைய அதிகாரிகளின் அலட்சியம் அல்லது வாக்காளர் அடையாள அட்டைகளை அச்சிடும் பொறுப்பில் உள்ள தனியார் ஏஜென்சியின் தவறுதான் இதற்கு காரணம் என்று அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதனை அடுத்து, இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டதாக கூறிய தேர்தல் ஆணைய அதிகாரிகள், எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தப் பெண்ணிடம் உறுதியளித்தனர்.
இது குறித்து மாநில துணை தேர்தல் அதிகாரி கூறியபோது, வாக்காளர் அடையாள அட்டைகள் கர்நாடக மாநிலத்தில் அச்சிடப்பட்டு வருவதாகவும், அச்சிடும் இடத்தில் தான் இந்தத் தவறு நடந்திருக்கும் என்றும், இந்தத் தவறை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.