குருகிராமில் 25 வயதான மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், குருகிராமில் தனது தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டென்னிஸ் வீராங்கனை ராதிகா தனது குடும்பத்துடன் குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துக் கொண்டிருந்த நிலையில், அவரது வீட்டில் இன்று நண்பகல் 12 மணியளவில் துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அந்த வீட்டுக்கு சென்றபோது, ராதிகாவை அவரது தந்தையே துப்பாக்கியால் ஐந்து முறை சுட்டதாகவும், அதில் மூன்று குண்டுகள் ராதிகாவை துளைத்து அவரது உயிரை பறித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, காவல்துறையினர் ராதிகாவின் தந்தையைக் கைது செய்துள்ளனர். ஆனால், அவர் ஏன் தனது மகளை சுட்டுக் கொன்றார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்றும், அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.