கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு ஓணம் விழா நாளை கொண்டாடப்படுகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி மாலை 5 மணிக்குக் கோவில் நடையை திறந்து வைத்தார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் மூன்று நாட்களுக்கு (செப்டம்பர் 4, 5, 6) ஐயப்ப பக்தர்களுக்குச் சிறப்பு ஓண விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 9.30 மணிக்குச் சந்திர கிரகணம் ஏற்படுவதால், தந்திரி உத்தரவின்படி, அன்றைய தினம் இரவு 9 மணிக்கே கோவில் நடை அடைக்கப்படும்.
பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையின்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, மூன்று நாட்களுக்கு ஓணம் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளன.