கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின்போது நடனமாடி கொண்டிருந்த கேரளாவை சேர்ந்த இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர், ஓணம் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற சிறப்பு கலை நிகழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தார். சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அவர் நடனமாடியபோது, திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதை கண்ட சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.
கேரளாவில் இருந்து பெங்களூருவுக்குச் சென்று கடினமாக உழைத்து வந்த அந்த இளைஞரின் இழப்பு, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.