பெங்களூரை சேர்ந்த குரூப் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனத்துக்கும் இடையிலான மின்னஞ்சல் தொடர்பில் ஊடுருவிய ஹேக்கர்கள், ரூ.2.16 கோடி தொகையை மோசடி செய்த சம்பவம் குறித்து பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரூப் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.2.16 கோடி தொகையை திசை திருப்பும் நோக்கத்துடன், ஹேக்கர்கள் அந்த நிறுவன அதிகாரிகளை போல ஆள்மாறாட்டம் செய்து, டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிதி பிரிவுக்கு போலியான வங்கிக்கணக்கு விவரங்களை அனுப்பியுள்ளனர்.
இதன் விளைவாக, டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனம் நவம்பர் 4ஆம் தேதி அந்த தொகையை மோசடி வங்கிக்கணக்குக்கு மாற்றியுள்ளது. எனினும், டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனம், சரியான நேரத்தில் மோசடியை கண்டறிந்ததாலும், வங்கியின் துரித நடவடிக்கையாலும் அந்த நிதி உடனடியாக முடக்கப்பட்டது. எனவே, எந்த நிதி இழப்பும் இல்லை" என்று விளக்கம் அளித்துள்ளது.
குரூப் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி அளித்த புகாரின் பேரில், இணைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மோசடி வங்கிக் கணக்கு குஜராத் மாநிலம் வதோதராவில் இருப்பது கண்டறியப்பட்டு, அந்த நிதி முடக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.