தலைநகர் டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகில் நேற்று மாலை நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹூண்டாய் ஐ20 ரக காரில் ஏற்பட்ட இந்த பயங்கர வெடி விபத்தில், 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து, டெல்லி காவல்துறை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது சாதாரண விபத்து அல்ல, ஒரு தீவிரவாத சதியாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பு நிகழ்வதற்கு சற்று முன்னதாக, ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் 3,000 கிலோகிராம் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த இரு நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை முகமைகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
வெடித்த கார், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டிருப்பது, இந்த சம்பவத்தில் காஷ்மீர் பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.