கொலம்பியாவில் உள்ள ஈ.ஐ.ஏ. பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் கல்வி மற்றும் சுகாதார துறைகள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“இந்தியா போன்ற ஒரு நாட்டில், சுகாதாரத் துறையையும், கல்வித் துறையையும் வெறும் தனியார்துறைமயமாக்குவது பலனளிக்காது. நாங்கள் அதை முயற்சி செய்து பார்த்தோம், ஆனால் அது வேலை செய்யவில்லை,” என்று ராகுல் காந்தி கூறினார்.
குறைந்தபட்சம் என் கட்சியும் நானும் இந்த துறைகளில் அரசாங்கத்தின் வலுவான ஈடுபாடு இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். எங்களது சிறந்த பல்கலைக்கழகங்கள் பொதுத்துறை பல்கலைக்கழகங்களே. இந்தியாவில் பல மாநிலங்கள் ஆரம்ப கல்வியில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், உயர்கல்வி ஒரு பெரிய வெற்றியாகவே உள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகள், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்த இரண்டு துறைகளிலும் எடுக்கப்பட்ட முன்னேற்றங்களை கண்டுகொள்ளாமல் பேசப்பட்டவை என்று கூறி பா.ஜ.க. தலைவர்கள் உடனடியாகக் கடுமையான எதிர்வினையைத் தெரிவித்தனர்.