ராகுல்காந்திக்கு பாஜக செய்தி தொடர்பாளர் நேரடியாக கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
ராகுல்காந்தி வாக்கு திருட்டு நடந்திருப்பதாக தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை விமர்சித்து வருவதை, பாஜக செய்தி தொடர்பாளர் பிந்து மகாதேவ் ஒரு டிவி விவாத நிகழ்ச்சியில் கண்டித்து பேசியபோது “ராகுல்காந்தியின் நெஞ்சில் சுட வேண்டும்” என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அவர் மீது பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ள காங்கிரஸ் “நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு பிந்து மகாதேவ் கொலை மிரட்டல் விடுத்துள்ளதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இது வாய் தவறியோ, எதார்த்தமாகவோ கூறப்பட்டதல்ல. மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கு விடுக்கப்பட்ட அப்பட்டமான கொலை மிரட்டல் ஆகும்” என தெரிவித்துள்ளது.
மேலும் பல கேள்விகளை அந்த கடிதத்தில் எழுப்பியுள்ள காங்கிரஸ், ராகுல்காந்தி மீதான இந்த கொலை மிரட்டலை கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம் பாஜக இதை மறைமுகமாக ஆதரிக்கிறதா? என்ற கேள்வியையும் கேட்டுள்ளது.
Edit by Prasanth.K