காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பீகாரில் வாக்கு திருட்டு மூலம் ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி முயல்வதாக பேரணிகளில் குற்றம் சாட்டினார்.
"என்.டி.ஏ.வின் 20 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் சலிப்படைந்துவிட்டதால், 65 லட்சம் பேர் உட்பட பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன," என்று அவர் தெரிவித்தார்.
"என் சகோதரர் ராகுல் காந்தி எப்போதும் உண்மையையே பேசுவார்." என்று உறுதி அளித்த பிரியங்கா, ஹரியானா தேர்தலில் நடந்த மோசடியை ராகுல் அம்பலப்படுத்தியதையும் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் மோடி, அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் அனைத்து தொழிற்சாலைகளும் நிறுவப்படுவதாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக செயல்படும் இவர்கள் ஏழைகளுக்காக எதுவும் செய்ய மாட்டார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பீகார் மக்களுக்கு ரூ.25 லட்சம் இலவச சிகிச்சை மற்றும் ஏழை குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் பிரியங்கா வாக்குறுதி அளித்தார்.