பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையின்போது அவரை சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு முதலில் நேரம் ஒதுக்கப்பட்டதாகவும், பின்னர் அது ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுவது, ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது. இது, பாஜக தன்னை முழுமையாக கைவிட்டுவிட்டதாகவே ஓபிஎஸ் உணர்வதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில், தனது அரசியல் இருப்பையும் செல்வாக்கையும் மீண்டும் நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் இருப்பதாகவும், அதற்காக அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் இணையலாம் என்ற அதிரடி பேச்சுக்கள் தற்போது தமிழக அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளன.
பாஜகவை நம்பி இத்தனை காலம் செயல்பட்டு வந்த ஓபிஎஸ், தற்போது பாஜக தன்னை வெளிப்படையாகவே புறக்கணித்துவிட்டதாக கருதுகிறார். இது அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில், "தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என ஓபிஎஸ் தரப்பில் பேசப்படுகிறது.
இதனால் ஓபிஎஸ், விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைவது அல்லது ஒரு தனி கட்சி ஆரம்பித்து விஜய்யின் கட்சியுடன் கூட்டணி அமைப்பது ஆகியவை முன்வைக்கப்படுகின்றன. புதிதாக அரசியல் களம் காணும் விஜய்க்கு, ஓபிஎஸ் போன்ற அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல் தலைவர் தேவைப்படுவதால், இந்த இணைப்பு இருவருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.