நெல்லையில் ஐடி ஊழியர் கவின் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சுர்ஜித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பெற்றோர்களான காவல் அதிகாரிகளும் குற்றப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியை சேர்ந்த ஐடி ஊழியரான கவின் என்பவரை சுர்ஜித் என்ற இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணையில் சுர்ஜித்தின் பெற்றோர் காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.
சுர்ஜித்தின் அக்காவும், கவினும் காதலித்து வந்த நிலையில், அந்த காதலை கைவிடும்படி சுர்ஜித்தும், பெற்றோரும் கண்டித்துள்ளனர். ஆனாலும் சுர்ஜித்தின் சகோதரி தொடர்ந்து கவினுடன் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுர்ஜித், கவினை பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொன்றுள்ளார். இதை அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார். இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவினின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வரும் அவர்களது உறவினர்கள், சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தங்கள் காவல் அதிகாரத்தை பயன்படுத்தி தப்பிவிட கூடும் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் சுர்ஜித்துடன் குற்றவாளி பட்டியலில் அவரது பெற்றோர்களான 2 காவல் உதவி ஆய்வாளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் விசாரணை நியாயமான முறையில் நடக்க உதவுவோம் என காவல்துறை கவினின் பெற்றோருக்கு உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K