மத்திய அரசின் பொது ஒலிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் தலைவராக பதவி வகித்த நவ்னீத் குமார் செகல் திடீரென தனது பொறுப்பிலிருந்து விலகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெறும் ஒன்பது மாதங்கள் மட்டுமே இந்த பதவியில் நீடித்த நிலையில், இந்த ராஜினாமா பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
பிரசார் பாரதி என்பது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இதுவே தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றை நிர்வகிக்கிறது.
இதன் தலைவர் சூர்ய பிரகாஷ் 2020-ல் ஓய்வு பெற்ற பிறகு, நான்கு ஆண்டுகளாக தலைவரை நியமிக்காமல் மத்திய அரசு காலதாமதம் செய்தது. அதன் பின்னரே, கடந்த மார்ச் மாதம் நவ்னீத் குமார் செகல் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஒன்பது மாதங்களில் அவர் விலகியிருப்பது, மத்திய அரசின் உயர்மட்ட நிர்வாகத்தில் உள்ள சர்ச்சைகளையும் கேள்விகளையும் சுட்டிக்காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.