பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷகீல் அகமது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது பீகார் காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குப்பதிவுக்கு முன் விலகல் அறிவிப்பால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிட கூடாது என்பதற்காகவே காத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஐந்து முறை எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யாகப் பதவி வகித்த ஷகீல் அகமது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய ராஜிநாமா கடிதத்தில், தனது விலகல் "கனத்த இதயத்துடன்" எடுக்கப்பட்ட முடிவு என குறிப்பிட்டுள்ளார்.
உடல்நல குறைவே விலகலுக்கு காரணம் என்று கூறியுள்ள அவர், வேறு எந்த கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும், காங்கிரஸின் கொள்கைகளில் தனக்கு இறுதிவரை நம்பிக்கை உண்டு என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.