ரயில் நிலையங்களில் கவுன்ட்டர்கள் மூலம் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, இனி அவர்களது கைப்பேசியில் பெறப்படும் ஒரு முறை கடவுச்சொல்லை கட்டாயம் அளிக்கும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தட்கல் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் விண்ணப்பத்தில் கைப்பேசி எண்ணைப்பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை ரயில் நிலைய அதிகாரிகளிடம் சரிபார்த்த பின்னரே பயணச்சீட்டு உறுதி செய்யப்படும்.
இந்த நடைமுறை கடந்த நவம்பர் 17 ஆம் தேதி சோதனை முயற்சியாக நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்களில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. உரிய பயணிகளுக்குத் தட்கல் பயணச்சீட்டுகள் கிடைப்பதை உறுதிசெய்யவும், இடைத்தரகர்களை தவிர்க்கவும் இந்த முன்முயற்சி அறிமுகப்படுத்தப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆன்லைனில் தட்கல் முன்பதிவுக்கு ஆதார் மூலம் ஓடிபி சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது ரயில் நிலைய கவுன்ட்டர்களிலும் இந்த புதிய பாதுகாப்பு நடைமுறை விரிவுபடுத்தப்படவுள்ளது.