ஒடிசாவில் இரண்டு பேராசிரியர்கள் மற்றும் அவர்களது நண்பர் ஆகிய மூவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு நீதி கேட்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் தடியடி மற்றும் கண்ணீர்புகை குண்டு வீச்சு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவிக்கு, அந்த கல்லூரியின் பேராசிரியர்கள் உட்பட 3 பேர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக மாணவி குற்றம்சாட்டினார். இது குறித்து காவல்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், தீக்குளித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை அடுத்து, இரண்டு பேராசிரியர்களும் அவர்களுடைய நண்பரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்ச் சம்பவத்திற்குச் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், போலீசார் அவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இந்த நிலையில், காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து நாளை மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக, காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.