ஒடிசாவில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கடந்த சில நாட்களாகப் பேராசிரியர் மீது குற்றம் சாட்டிய நிலையில், கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்காததால், அந்த மாணவி திடீரென தீக்குளித்தார். அதன் பின்னர்தான் தற்போது அந்த கல்லூரிப் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஒடிசாவில் உள்ள பாலசோர் ஃபகிர் மோகன் தன்னாட்சிக் கல்லூரியில் 22 வயது மாணவி ஒருவர் பி.எட்.. படித்துக்கொண்டிருந்த நிலையில், அந்த மாணவி பேராசிரியர் சமீர் குமார் சாஹு, என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். அவர் கல்லூரி நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டது. ஆனால், கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், மனம் வெறுத்த அந்த மாணவி இன்று திடீரென தீக்குளித்தார். அவரது உடல் 95% பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைக் காப்பாற்ற முயன்ற இன்னொரு மாணவரும் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த தீக்குளிப்பு சம்பவத்தை அடுத்தே பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மாணவி தீக்காயங்களுடன் கல்லூரி வளாகத்தில் ஓடும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.