பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவரை இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அவர்களது நண்பர் என மூன்று பேர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், இயற்பியல் ஆசிரியர் நரேந்திரா, உயிரியல் ஆசிரியர் சந்தீப் ஆகியோரும், அவர்களது நண்பர் அனூப் என்பவரும் சேர்ந்து, அதே கல்லூரியில் படிக்கும் மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கல்வி குறிப்புகள் மற்றும் பாடத்தில் சந்தேகம் கேட்பதாக வந்த மாணவியிடம் முதலில் பழக தொடங்கிய நரேந்திரா, சந்தீப் ஆகியோர் பின்னர் அவருடன் நட்பு வளர்த்து, தனது அறைக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதை யாரிடமாவது கூறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாணவி ஒரு கட்டத்தில் காவல்துறையில் புகார் அளிக்க, காவல்துறையினர் அதிர்ச்சியடைந்து வழக்கு பதிவு செய்து, இரண்டு ஆசிரியர்களையும், அவர்களது நண்பர் அனூப் என்பவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இது குறித்து கர்நாடக மாநில மகளிர் ஆணையமும் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.