பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக, தங்களுக்கு சாதகமாக வெளிவந்த கருத்துக்கணிப்புகள் காரணமாக, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி முகாமில் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. பாட்னாவில் NDA தொண்டர்கள் மாபெரும் ஏற்பாடுகளைசெய்து வருகின்றனர்.
பா.ஜ.க.வின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணா சிங் கல்லு, வெற்றி உறுதியென்ற நம்பிக்கையில் 500 கிலோ லட்டு தயாரிக்குமாறு ஆர்டர் கொடுத்துள்ளார். லட்டு சமைக்கும் இடத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதீஷ் குமார் படங்கள் வைக்கப்பட்டு, தீய சக்தி அகல எலுமிச்சை மற்றும் மிளகாய்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்காகச் சர்க்கரை குறைக்கப்பட்ட லட்டுகளும் தயாரிக்கப்படுகின்றன.
இதேபோல், மொகாமா சட்டமன்ற உறுப்பினர் அனந்த் சிங்-கின் குடும்பத்தினர், அவரது மனைவி நீலம் தேவியின் இல்லத்தில் சுமார் 50,000 பேருக்கு விருந்து அளிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக 5 லட்சம் ரசகுல்லா மற்றும் குலாப் ஜாமூன் இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
அனந்த் சிங் தற்போது நீதிமன்ற காவலில் இருந்தாலும், வாக்கு எண்ணிக்கை நாளான இன்று NDA தொண்டர்களுக்கு சிறப்பு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. NDA கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற அதீத நம்பிக்கையில் தொண்டர்கள் உள்ளனர்.