காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதன்முறையாக இன்று பீகாரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராஜா பகாரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்றுப் பேசிய அவர், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரையும் பா.ஜ.க.வையும் கடுமையாக விமர்சித்தார்.
நிதீஷ் குமார் தற்போது "மனு ஸ்மிருதியை நம்பும்" பா.ஜ.க.வின் மடியில் அமர்ந்திருக்கிறார். ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா மற்றும் கர்பூரி தாக்கூர் போன்ற தலைவர்களின் கொள்கைகளை அவர் முழுமையாக கைவிட்டுவிட்டார்.
சித்தாந்தத்தை கைவிட்ட நிதீஷ் குமாரால், இனிமேலும் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக போராட முடியாது. இந்த தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. அவரை முதல்வராக ஆக்கப்போவதில்லை என்பதை நிதீஷ் குமார் உணரவில்லை. அவருக்கு பதிலாக, பா.ஜ.க.வைச் சேர்ந்த சில சாதாரண தொண்டர்களுக்கு பதவியை வழங்கிவிடும்.
பிரதமர் மோடிக்கு உலகை சுற்றிப் பார்க்க நேரம் இருக்கிறது. ஆனால், சொந்த நாட்டில் உள்ள மாநிலங்களின் பிரச்சினைகளை பார்க்க நேரமில்லை. அவர் தேர்தல் நேரத்தில் மட்டுமே தென்படுகிறார். மாநகராட்சி தேர்தலில் கூட வீதிகளில் வந்து கர்ஜிக்கும் மோடி, பீகார் தேர்தலுக்கு தன் மகனின் திருமணத்தை போல பரபரப்பாக இருக்கிறார்.
இவ்வாறு, முதல்வர் நிதீஷ் குமாரின் கூட்டணி மாற்றத்தையும் பிரதமர் மோடியின் தேர்தல் கால வருகையையும் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாகச் சாடினார்.