கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிபா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், நேற்று இரண்டாவது முறையாக ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, கேரள மாநில சுகாதாரத்துறை மாநிலம் முழுவதும் உச்சகட்ட எச்சரிக்கை செய்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 57 வயது நபர் ஒருவர் நேற்று நிபா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மஞ்சேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்த நிலையில், நேற்று இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டதை அடுத்து கேரளா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்த 46 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பட்டியலில் உள்ளவர்களை அடையாளம் காண சி.சி.டி.வி. காட்சிகள், மொபைல் டவர் இருப்பிட தரவுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு இந்த நோய் பாதிக்கப்பட்டு உள்ளதா என்பதை கண்டறிய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை பார்க்க வருபவர்கள் கண்டிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.