கடந்த சில ஆண்டுகளாகவே மனிதர்களுக்கு உணவுகளை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் பெருகிவரும் நிலையில், தற்போது நாய்களுக்கு சுவையான உணவுகளை டெலிவரி செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் தற்போது அனைத்து பொருட்களும் வாங்கப்பட்டு வரும் நிலையில், நாய்களுக்கான சுவையான உணவை டோர் டெலிவரி செய்யும் வசதியும் வந்துவிட்டது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்களுக்கு, ஆர்டரின் பேரில் சுவையான உணவு தயாரித்து டோர் டெலிவரி செய்கிறது.
ஸ்ரீதர் மற்றும் கோவிந்த் ஆகியோரால் நிறுவப்பட்டுள்ள 'கேஸ் டாக் ஃபுட்' என்ற இந்த நிறுவனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ஏராளமானோர் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
"ஒவ்வொரு நாயின் ஊட்டச்சத்து தேவைக்கேற்ப உணவுகளை சமைத்து வழங்கி வருகிறோம்" என்றும், "தங்கள் சொந்த நாய்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதை கவனித்தபோது இந்த யோசனை தங்களுக்கு வந்தது" என்றும் ஸ்ரீதர் மற்றும் கோவிந்த் தெரிவித்துள்ளனர்.