கடந்த ஆறு நாட்களாக காணாமல் போனதாக கூறப்பட்ட, திரிபுராவை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி சினேகாவின் சடலம் யமுனா நதியில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆத்மா ராம் சனாதன் தர்ம கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சினேகா, ஜூலை 7 ஆம் தேதி காணாமல் போனார். அவரை கண்டுபிடிக்க திரிபுரா முதல்வர் உத்தரவிட்ட நிலையில், தனிப்படை அமைத்து தீவிரமாக தேடப்பட்டு வந்தது. அவரை இறக்கிவிட்டதாகக்கூறப்பட்ட கார் ஓட்டுநர், சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் ஆகியவை விசாரணை செய்யப்பட்ட நிலையில், 6 நாட்களாக அவர் எங்கே இருக்கிறார் என்பதைக்கண்டுபிடிக்க முடியவில்லை. சி.சி.டி.வி. காட்சிகளும் சரியாக கிடைக்கவில்லை என்றும், அவரது வங்கிக் கணக்கிலிருந்தும் பணம் எடுக்கப்படவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில், கிழக்கு டெல்லியில் கீதா காலனி என்ற பகுதிக்கு அருகில் உள்ள யமுனா நதியில் அதிகாரிகள் சினேகாவின் பிணத்தை மீட்டனர். கார் ஓட்டுநர் அவரை இறக்கிவிட்ட இடத்தில் இருந்து, அவர் பாலத்தில் இருந்து குதித்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது குடும்பத்தினர் உடலை அடையாளம் காட்டிய நிலையில், பிரேத பரிசோதனைக்கு சினேகாவின் உடல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பிரேதப்பரிசோதனை முடிவு வந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.