மும்பையின் சந்தாக்ரூஸ் பகுதியில் நள்ளிரவில் ஐந்து வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு ரூ.90,000-க்கு விற்கப்பட்ட சம்பவத்தில், மும்பை போலீஸார் விரைந்து செயல்பட்டு சிறுமியை மீட்டனர்.
விசாரணையில், அச்சிறுமியை அவரது தாய்மாமா மற்றும் அத்தை ஆகியோரே கடத்தி சென்றுள்ளனர் என்றும், அவர்கள் ரூ.90,000-க்கு விற்ற சிறுமியை வாங்கியவர், பின்னர் ரூ.1,80,000-க்கு மறுவிற்பனை செய்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. சொந்த தாய்மாமாவே சிறுமியை கடத்தியதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
வக்கோலா காவல் நிலைய அதிகாரிகள், தீவிர தேடுதலுக்கு பிறகு சிறுமியை பன்வேல் பகுதியில் கண்டுபிடித்து, நவம்பர் 25-ஆம் தேதி பத்திரமாக மீட்டுள்ளனர். சிறுமி மீட்கப்பட்ட பின்னர், காவல்துறை அதிகாரி ஒருவர் சாக்லேட் கொடுத்து ஆறுதல் கூறி, அவரது தாயிடம் ஒப்படைத்தார்.
குழந்தை கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட ஐந்து நபர்களையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தல் குறித்து மும்பை போலீஸார் சமூக ஊடகத்திலும் பதிவிட்டுள்ளனர்.