மும்பையைச் சேர்ந்த 65 வயதான ஓய்வுபெற்ற வழக்கறிஞர் கன்ஷியாம் மகாத்ரே என்பவரை, ஆனந்த் ராத்தி ஷேர்ஸ் & ஸ்டாக் ப்ரோக்கர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் போல ஆள்மாறாட்டம் செய்த கும்பல், ரூ. 9.94 கோடி மோசடி செய்துள்ளது.
மோசடி செய்பவர்கள், "AR Trade Mobi" என்ற போலியான வர்த்தக ஆப்பில் முதலீடு செய்யும்படி மகாத்ரேவை தூண்டினர். சுமன் குப்தா என்ற பெண் மூலம் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்ட கும்பல், அவரை ஒரு போலி முதலீட்டு குழுவில் சேர்த்தது. அந்த ஆப்பில் அதிக லாபம் கிடைப்பதாக காட்டி, மகாத்ரேவிடம் இருந்து ஜூன் முதல் நவம்பர் வரை பல வங்கி கணக்குகளுக்கு ரூ. 9,94,76,958 தொகையை முதலீடாக பெற்றனர்.
பின்னர், மகாத்ரே லாபத்தை எடுக்க முயன்றபோது, தொழில்நுட்ப கோளாறு, வரி மற்றும் கமிஷன் என்ற பெயரில் மேலும் பணம் கேட்டுள்ளனர். சந்தேகமடைந்த அவர், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரித்தபோது அது போலியான ஆப் மற்றும் குழு என்று உறுதியானது.
மகாத்ரே அளித்த புகாரின் பேரில், மும்பை சைபர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரில் இயங்கும் தேசிய அளவிலான மோசடி கும்பல் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.