புனேவில் ஐ.டி வேலையை இழந்த ஒருவர் கொள்ளையனாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியை சேர்ந்த ஒருவர் அரியானாவில் வங்கி ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் மனைவி, மகன்கள் புனேவில் உள்ள பிம்பிள் குராவ் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டிற்கு கூரியர் கொடுப்பது போல வந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியை நீட்டி அவர்களிடம் பணம், நகையை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது அவரை சுற்றி வளைத்து பிடித்த அவர்கள் போலீஸாருக்கு தகவல் கூறியுள்ளனர்.
போலீஸார் வந்து அந்த நபரை கைது செய்து விசாரித்ததில் அவர் பெயர் சங்போய் கோம் சேர்டோ என தெரிய வந்துள்ளது. 40 வயதாகும் சங்போய் மணிப்பூரை சேர்ந்தவர். 12 ஆண்டுகளுக்கு முன்னர் புனே வந்தவர் அங்குள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். நல்ல சம்பளம் வரவே புனேயில் சொந்தமாக 2 வீடுகளை தவணை முறையில் வாங்கியுள்ளார்.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் அவரது வேலை பறிபோய் விட்டது. இதனால் வருமானம் இல்லாமல் வீட்டுக்கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்ளையடிக்க முடிவு செய்த அவர் வங்கி மேலாளர் வீட்டை நீண்ட காலமாக நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டு, கடைசியில் மாட்டிக் கொண்டுள்ளார். கடன் தொல்லையால் ஐடி ஊழியர் கொள்ளையனாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K