சைபர் மோசடியாளர்கள், டிஜிட்டல் கைது என்ற முறையில், கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் சிக்கபள்ளாப்பூர் பா.ஜ.க. எம்.பி. டாக்டர் கே. சுதாகரின் மனைவி டாக்டர் பிரீத்தி சுதாகரிடம் ₹14 லட்சம் மோசடி செய்துள்ளதாக பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 26 அன்று, 44 வயதான பிரீத்திக்கு மும்பை சைபர் கிரைம் அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு, மர்ம நபர்கள் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு விடுத்துள்ளனர். அவரது வங்கி கணக்கு சட்டவிரோத சர்வதேச பரிவர்த்தனைகளுடன் தொடர்புடையது என்றும், உடனடியாக ஒரு குறிப்பிட்ட கணக்கிற்கு பணத்தை மாற்றாவிட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்றும் மிரட்டியுள்ளனர்.
கைது பயத்தால், பிரீத்தி தனது வங்கி கணக்கிலிருந்து ₹14 லட்சத்தை, மோசடிக்காரர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். அதன்பின் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பிரீத்தி, அதே மாலை பெங்களூரு மேற்குப் பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை உடனடியாக செயல்பட்டு, தேசிய சைபர் குற்ற அறிக்கை இணையதள உதவி எண் 1930 மூலம் வழக்குப் பதிவு செய்து, மோசடியாளர்களின் கணக்கை முடக்கியுள்ளது.
செப்டம்பர் 3 அன்று, நீதிமன்ற உத்தரவின் பேரில் முடக்கப்பட்ட பணம், பிரீத்தியின் கணக்கிற்கு ஒரு வாரத்திற்குள் திருப்பி அனுப்பப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.