பெங்களூருவில், நேற்று இரவு, ஒரு மனித இதயம் முக்கியமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மெட்ரோ ரயில் மூலம் 20 நிமிடங்களில் கொண்டு செல்லப்பட்டது.
பெங்களூருவில் உள்ள ஸ்பார்ஷ் மருத்துவமனை குழுவினர், இதயத்தை யஷ்வந்த்பூர் மெட்ரோ நிலையத்திலிருந்து, சவுத் பரேட் கிரவுண்ட் மெட்ரோ நிலையத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இந்த இரு நிலையங்களுக்கும் இடையிலான தூரத்தை வெறும் 20 நிமிடங்களில் மெட்ரோ ரயில் கடந்து சாதனை படைத்தது.
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) வெளியிட்ட அறிக்கையின்படி, இதயம் இரவு 11:01 மணிக்கு யஷ்வந்த்பூர் மெட்ரோ நிலையத்தில் எடுத்து செல்லப்பட்டு, 11:21 மணிக்கு மந்த்ரி சதுக்கம் சம்பிகே சாலை மெட்ரோ நிலையத்தை அடைந்தது. இந்த 20 நிமிட பயணத்தில், மெட்ரோ ஏழு நிலையங்களை கடந்தது.
மெட்ரோ அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் இணைந்து செயல்பட்டு, இதயம் பாதுகாப்பாகவும், தடையின்றியும் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து BMRCL வெளியிட்ட அறிக்கையில், "உயிர்காக்கும் பயணங்களுக்கு திறமையான மற்றும் சரியான நேரத்தில் போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதன் மூலம் மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட BMRCL உறுதிபூண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.