கிரிமினல் சுகேஷ் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட ரூ.215 கோடி பணமோசடி வழக்கில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த ஜூலை 3-ஆம் தேதி, அமலாக்கத்துறை தன் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றவாளி உண்மையில் குற்றம் செய்தாரா என்பதை விசாரணை நீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று நீதிமன்றம் கூறியது.
சுகேஷ் சந்திரசேகரின் குற்றப்பின்னணி தெரிந்தும் அவரிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகளை ஜாக்குலின் தொடர்ந்து பெற்றுள்ளார் என அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள், உடைகள், வாகனங்கள் போன்றவற்றை அவர் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஜாக்குலின் கடுமையாக மறுத்துள்ளார். தனக்கு சுகேஷின் குற்றச்செயல்கள் பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
இருதரப்பு வாதங்களை நீதிமன்றம் முழுமையாக ஆராய்ந்த போதிலும், தற்போதைய நிலையில் வழக்கை ரத்து செய்ய போதுமான காரணங்கள் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இந்த முடிவை எதிர்த்து இப்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.