சமீபத்தில் மருமகனை இழுத்துக் கொண்டு மாமியார் ஓட்டம் பிடித்த சம்பவத்தில் இருவரும் காவல் நிலையத்தில் ஆஜராகி தங்களை சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்திரகுமார். இவரது மனைவி சப்னா. மகள் ஷிவானி. சமீபத்தில் ஷிவானிக்கு திருமணம் செய்வதற்காக ராகுல்குமார் என்ற இளைஞருடன் நிச்சயம் செய்யப்பட்டது. திருமணம் நெருங்கி வந்த நிலையில் சப்னா அடிக்கடி மாப்பிள்ளை ராகுல்குமாரிடம் பேசி வந்துள்ளார். அவர் மீது காதலில் விழுந்த சப்னா, மகளின் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாக மாப்பிள்ளை ராகுல்குமாரை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாமியாரையும், மாப்பிள்ளையையும் தேடி வந்த நிலையில் அவர்களே வந்து டாடன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். சப்னா பணம், நகையை திருடிக் கொண்டு ஓடிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்த அவரது குடும்பத்தார் காவல் நிலையம் வந்து பிரச்சினை செய்ததுடன், தங்களுக்கு சப்னா தேவையில்லை என்றும், அவர் கொண்டு சென்ற பணம், நகையை மீட்டு தரும்படியும் கேட்டுள்ளனர்.
ஆனால் தான் எந்த பணம், நகையையும் எடுத்து செல்லவில்லை என சப்னா வாதிட்டுள்ளார். மேலும் காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்த முயன்ற நிலையில், தான் தனது மருமகனைதான் திருமணம் செய்து கொள்வேன் என சப்னா விடாப்பிடியாக இருந்துள்ளார். மருமகனான ராகுல்குமார், முதலில் சப்னா தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி தன்னை அழைத்து சென்றுவிட்டதாகவும், தான் விருப்பத்துடன் செல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால் உங்கள் மாமியார் சப்னாவை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்களா? என போலீஸ் கேட்டபோது அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் ராகுல்குமாரை சப்னாவுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என ராகுலின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எல்லாப் பக்கமும் சிக்கலாக உள்ள இந்த மாமியார் - மாப்பிள்ளை காதல் பிரச்சினையை எப்படி முடித்து வைப்பது என குழப்பத்தில் உள்ளனராம் போலீஸ்.
Edit by Prasanth.K