மதுரையை சேர்ந்த தொழிலதிபர் கடத்தப்பட்ட நிலையில், இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒன்பது பேரை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையை சேர்ந்த சுந்தர் என்ற தொழிலதிபர், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக தனது வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், சுந்தருக்கு சொந்தமான நிலத்தை சிலர் வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்தது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்த வழக்கில் சுந்தருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனை அடுத்து எதிர் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த நில விவகாரம் தொடர்பாக அடிக்கடி சுந்தருக்கு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி, சுந்தரை மர்ம நபர்கள் கடத்தியதாக சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்ததை அடுத்து, போலீசார் இது குறித்து தீவிர விசாரணை செய்தனர். தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் 5 பேரும், நேற்று 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடிக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விரைவில் அந்த ரவுடியும் கைது செய்யப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.