தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த பங்க் மேனேஜரை, இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிதந்தராபாத் என்ற பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு, இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பெட்ரோல் நிரப்பச் சொன்ன நிலையில், கையில் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் கேட்டனர்.
அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், “மேனேஜர் சொன்னால் தருகிறேன்” என்று கூறினார். இதையடுத்து, இருவரும் மேனேஜரிடம் சென்று பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்புமாறு கேட்டனர். ஆனால் மேனேஜர் அதற்கும் மறுத்துவிட்டார்.
இதனால் பெட்ரோல் பங்க் மேனேஜருக்கும் அந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென, அந்த இருவரில் ஒருவர் துப்பாக்கி எடுத்து மேனேஜரை சுட்டுவிட்டு தப்பி ஓடினார்.
இதில் மேனேஜர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.