ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சஷோடி பகுதியில் திடீர் மேக வெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல் துறை அதிகாரி ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி சஷோடி பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பால், அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் திடீரென உயர்ந்தது. இதனால், அப்பகுதியில் இருந்த பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின. பெரும்பாலான சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால், மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி இன்றித் தவித்தனர்.
இந்த நெருக்கடியான சூழலில், கிஷ்த்வார் காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர், கிராம மக்களுக்கு மீட்புப் பணியில் ஈடுபட்டார். குறிப்பாக, வெள்ளம் சூழ்ந்த ஒரு தற்காலிக பாலத்தை கடக்க முடியாமல் தவித்த ஒரு குழந்தையை தனது தோளில் சுமந்தபடி, பாதுகாப்பாக மறுபுறம் அழைத்து சென்றார். அந்த அதிகாரி குழந்தையுடன் பாலத்தைக் கடக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அவரது மனிதநேயத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
"உயிரைக் காக்கும் கடவுள்" என்று பலரும் அவருக்குப் புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த புகைப்படம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல்துறையினர் செய்து வரும் உதவி மற்றும் சேவையின் ஒரு அடையாளமாக மாறியுள்ளது.