திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் என்பவர் பணியின்போது வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த கொலை குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் நேற்றிரவு சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட காவல்துறை அதிகாரிகள் சீருடையில் கொல்லப்பட்டது, நமது சமூகத்தின் ஆன்மா சிதைந்து, நெறிமுறை குலைவுப் பாதையில் செல்வதற்கான அறிகுறியாகும்.
ஒரு சாதாரண மனிதன் கூட, கோபத்தின் உச்சத்தில், காவல்துறையினரை தாக்குவதற்கோ அல்லது பொதுவெளியில் அவர்களை படுகொலை செய்வதற்கோ என்ன காரணம்? ஒரு பெரிய குற்றத்தைச் செய்தால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் ஏன் இப்படி செய்கிறார்கள்?
ஏன்?
இதற்கான காரணங்களாகக் கருதப்படுவது:
1. அதிக அளவில் மது புழக்கம்: அரசால் நடத்தப்படும் மதுக்கடைகளின் மூலம், மது அருந்துவது எளிதாக்கப்பட்டுள்ளது.
2. போதைப்பொருட்கள் அதிகரிப்பு: முன்பு பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்த போதைப்பொருட்கள், இப்போது புதிய செயற்கைப் பொருட்களின் வருகையால், குறைந்த வருவாய் உள்ளவர்களிடமும் எளிதாகக் கிடைக்கிறது.
3. மோசமடையும் சட்டம்-ஒழுங்கு: கிராமப்புறங்கள் முதல் நகரங்கள் வரை, அனைத்து மட்டங்களிலும் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது.
இந்த மூன்று சிக்கல்களையும் தீர்ப்பதுதான் சட்டம்-ஒழுங்கை மீண்டும் நிலைநிறுத்த உதவும்.
காவல்துறையினர், குறிப்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் அதற்குக் கீழ் உள்ளவர்கள், நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட வேண்டும்.
துப்பாக்கிகள், உடல் கேமராக்கள், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிஸ்டல்கள், சிறந்த ரோந்து வாகனங்கள் ஆகியவை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இதனால், காவலர்கள் ஆபத்தான பகுதிகளுக்குத் தனியாகச் செல்லாமல், உடன் ஒரு காவலருடன் ரோந்து செல்ல முடியும்.
உயர் மட்டத்திலுள்ள கொள்கை முடிவுகளின் தோல்வி, நேரடியாக அடிமட்டத்திலுள்ள சாமானிய மக்களை பாதிக்கிறது. இந்தச் சம்பவம், நம் முதலமைச்சரும், பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.