இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் உறவுகளின் மத்தியில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2026-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இதை அவரே பிரதமர் மோடியிடம் போன் செய்து உருதி செய்துள்ளார்.
இந்திய அரசு நடத்தவிருக்கும் முக்கிய நிகழ்வான "AI Impact Summit"-இல் அதிபர் மாக்ரோன் கலந்துகொள்ள உள்ளார். இந்த மாநாட்டில் அவர் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் இரு நாடுகளின் எதிர்கால திட்டங்கள் குறித்துப் பேசுவார் என தெரிகிறது.
இந்தப் பயணத்தின்போது, மாக்ரோன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பார்.
கடந்த சனிக்கிழமை, இரு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியபோது, பிரெஞ்ச் அதிபரின் இந்திய வருகை உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியதாவது: "அதிபர் மாக்ரோனுடன் மிகச் சிறந்த உரையாடல் நிகழ்ந்தது. பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை நாங்கள் ஆய்வு செய்து நேர்மறையாக மதிப்பிட்டோம். உக்ரைன் மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் உட்பட, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை, உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்" என பதிவிட்டிருந்தார்.