உத்தர பிரதேசத்தில் முதுமையை போக்கி இளமையாக்குவதாக கூறி 35 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீஸார் தேடி வருகின்றனர்.
முதுமை என்பது பலருக்கும் அச்சமளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. பலரும் முதுமையை மறைத்து இளமையாக தங்களை காட்டிக் கொள்ள விரும்பும் நிலையில் அதை பயன்படுத்தி பல அழகு சாதன பொருட்கள் அமோக விற்பனையாகின்றன. இதில் பல மோசடிகளும் நடக்கின்றன.
அப்படியான ஒரு சம்பவம்தான் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. கான்பூரை சேர்ந்த ராஜீவ் துபே, அவரது மனைவி ராஷ்மி துபே இருவரும் முதுமையை போக்கி இளமையை போக்கும் சிகிச்சை அளிப்பதாக விளம்பரம் செய்து பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர்.
இளமையை திரும்ப செய்ய இஸ்ரேலில் இருந்து டைம் மெசின் வரவழைத்துள்ளதாகவும், அதன்மூலம் 60 வயது நபரை 25 வயது நபராக மாற்ற முடியும் என்றும் பலரை நம்ப வைத்துள்ளனர். இளமை சிகிச்சைக்கு ரூ.90 ஆயிரம் வரை வசூலித்துள்ளனர்.
சுமார் ரூ.35 கோடி வரை ஏமாற்றிய தம்பதி மீது பலரும் புகார் அளித்துள்ள நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் மோசடி தம்பதியை வலைவிரித்து தேடி வருகின்றனர்.
Edit by Prasanth.K