உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது, மருத்துவர் தவறுதலாக பெண்ணின் தலைக்குள் ஊசியை வைத்துவிட்டு மறந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹாபூர் என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், தலையில் காயத்துடன் வந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது, மருத்துவர் தலையின் உள்ளே ஊசியை தவறுதலாக வைத்துவிட்டு தைத்துவிட்டதாக தெரிகிறது.
அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்ற பிறகு, கடுமையான வலியால் துடித்த பெண் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு காயமடைந்த பகுதிக்கு ஸ்கேன் செய்தபோது, ஊசி தலைக்குள் இருப்பது தெரிய வந்தது.
இதனால், மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து, மறுபடியும் அறுவை சிகிச்சை செய்து, அந்த ஊசியை அகற்றினர். அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மது போதையில் இருந்ததாகவும், அதனால் தான் அவர் ஊசியை மறந்து விட்டதாகவும், பெண்ணின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநில அரசு, சம்பந்தப்பட்ட மருத்துவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.