உத்தர பிரதேசத்தில் மகள் விபச்சார கேஸில் சிக்கியதாக தாய்க்கு போன் செய்து பணம் பறிக்க முயன்ற கும்பலால் தாய் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்ட நிலையில், அதன்மூலம் வித்தியாச வித்தியாசமான முறையில் ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்களும் அதிகரித்து வருகின்றன. முன்னதாக வங்கி ஊழியர் போல பேசி ஓடிபி எண்ணை பெற்று பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அதிகமாக இருந்தது. ஆனால் அதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதால் மோசடி கும்பல் பல்வேறு யுக்திகளை கையாள தொடங்கியுள்ளது.
சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் 58 வயதான மால்தி வர்மா என்பவருக்கு ஒரு ஃபோன் கால் வந்துள்ளது. அதன் முகப்பில் காவலர் ஒருவர் படம் இருந்துள்ளது. அதில் பேசிய நபர் உங்கள் மகள் விபச்சாரம் செய்தபோது போலீஸில் பிடிப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கு எதுவும் போடாமல் இருக்க 2 லட்சம் நான் சொல்லும் வங்கி கணக்கில் போட்டுவிடுங்கள்” என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மால்தி வர்மா தனது இன்னொரு மகளுக்கு அழைத்து இந்த விவரத்தை சொல்லியுள்ளார். அந்த கால் வந்த நம்பரை சோதித்த அவர், இது போலி அழைப்பு என்று தனது தாயை சமாதானப்படுத்தியதுடன், தனது சகோதரிக்கு போன் செய்து அவர் நலமாக இருப்பதையும் உறுதி செய்தார். எனினும் அந்த போன் காலில் வந்த செய்து மால்தியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்ததால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகியுள்ளார்.
ஒரு மோசடி ஃபோன் கால் வந்ததால் பள்ளி ஆசிரியை மாரடைப்பால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K