தீவிரமான புற்றுநோயால் காலமான தனது தந்தையின் துயரமான போராட்டத்தை பற்றி மகன் ஒருவர் ரெட்டிட் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
2023 அக்டோபரில் புற்றுநோய் கண்டறியப்பட்ட இவரது தந்தை, 18 கீமோதெரபிகள் மற்றும் ஒரு பெரிய அறுவை சிகிச்சை உட்பட தாங்க முடியாத வலிகளை சகித்துக்கொண்டார். 2025 மே மாதம் புற்றுநோய் மீண்டும் எலும்புகளுக்கு பரவியதால், அவர் மேலும் ஆறு கீமோதெரபிகளை எதிர்கொண்டார். இறுதியில், தன் மகனின் கைகளை பிடித்தபடியே அவர் காலமானார்.
சடங்குகளுக்கு பிறகு, மகன் கண்டெடுத்த தந்தையின் டைரியில் "என் மகனுக்காக" என்ற தலைப்பில் ஒரு குறிப்பு இருந்தது. அதில், வாழ்க்கையில் சோகம் ஏற்பட்டால் பதற்றப்படாமல் குடும்பத்தை கவனித்துக்கொள்ளுமாறு தந்தை மகனை வலியுறுத்தி இருந்தார்.
இந்தக் குறிப்பையும், அதில் இருந்த காப்பீட்டு விவரங்களையும் கண்ட மகன், "குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் நம்பிக்கையுடன் அவர் புறப்பட்டிருக்கலாம் என்பதை நான் புரிந்துகொண்டேன்" என்று எழுதியுள்ளார். இந்த உணர்வுப்பூர்வமான பதிவு இணையத்தில் வைரலாகி, பல பயனர்களை கண்ணீரில் ஆழ்த்தியதுடன், மகனுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.