ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமான நிலையில் அவருக்கு அரசியல் கட்சியின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கரூர் எம்பி ஜோதிமணி தனது சமூக வலைத்தளத்தில் போய் வாருங்கள் அப்பா என உருக்கமாக பதிவு செய்துள்ளார். அவரது பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்,மத்திய அமைச்சர்,ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு .EVKS இளங்கோவன் அவர்களின் மறைவு , எதிர்கொள்ளவே முடியாத அதிர்ச்சியையும்,துயரத்தையும் அளிக்கிறது. மலையே சாய்ந்தது போல் உணர்கிறேன்.
தான் ஒரு காங்கிரஸ்காரன் என்பதில் பெருமை கொண்டவர், அச்சமற்று பொதுவெளியில் தான் நம்புகிற ஒரு கருத்தை உறுதியோடு சொல்லக்கூடியவர்,சுயமரியாதையும்,தன்மானமும் மிக்கவர், இளைய தலைமுறை அரசியல் வாதிகளை சிறப்பாக செயல்படும்போது பாராட்டி ஊக்கப்படுத்தக்கூடியவர். எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு தந்தையைப் போன்றவர்.
அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும்,தமிழ்நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. ஏற்கனவே மகனை இழந்த துயரத்திலிருந்து மீளமுடியாத தாய்,கணவரையும் இழந்து நிற்கும்போது அவரை அணைத்துக்கொள்வது தவிர,ஆறுதல் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்க நண்பர்களுக்கும் , எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரின் மனதிலும் நீங்கள் உயிர்த்திருப்பீர்கள். போய்வாருங்கள் அப்பா!