21 வயதான இளைஞர் ஒருவர், தான் நான்காம் நிலை பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுதான் தனது கடைசி தீபாவளி என்றும் உருக்கமாக ரெடிட் தளத்தில் செய்த பதிவு, சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2023-ல் நோய் கண்டறியப்பட்டு, பல மாத சிகிச்சைக்கு பிறகும், மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், இந்த ஆண்டுக்குள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் தீபாவளியை நினைத்து மனம் உடைந்த அவர், "இறுதி முறையாக இந்த ஒளியை காணப் போகிறேன் என்று நினைப்பது கடினம். அடுத்த ஆண்டு நான் நினைவாக மட்டுமே இருப்பேன்," என்று எழுதியுள்ளார். பயணம், தொழில், நாய் தத்தெடுத்தல் போன்ற நிறைவேறாத கனவுகளும், பெற்றோரின் சோகமும் தன்னை வாட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அதிசயங்கள் நடந்தால்..." என்ற தலைப்பில் அவர் இட்ட இந்தப் பதிவு, அவர் மறைவதற்கு முன் ஒரு சிறிய தடயத்தை விட்டு செல்லவே என்றும் தெரிவிக்கிறது. இந்த பதிவை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளித்து, ஒரு அதிசயம் நடக்க வேண்டும் என்று பிரார்திப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். எஞ்சியிருக்கும் நாட்களை மகிழ்ச்சியாக வாழும்படி சிலர் அவருக்கு ஊக்கமளித்துள்ளனர்.