தெலங்கானா மாநிலத்தில், இறந்த ஒருவரின் உடலை ஒரு காவல்துறை அதிகாரி தள்ளுவண்டியில் எடுத்து செல்ல நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோஸ்கி நகரில் உள்ள சிவாஜி சௌக் பகுதியில், ஒரு டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், மொகுலையா என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த காவல்துறை உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சித்தது.
ஆனால் உடலை கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட போதிலும், அது சரியான நேரத்தில் வந்து சேரவில்லை. இதனால், வேறு வழியின்றி, போலீசார் உடலை எலுமிச்சை விற்பனை செய்ய பயன்படுத்தப்படும் ஒரு தள்ளுவண்டியில் வைத்து, பிரேத பரிசோதனைக்காக அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.