சென்னையில், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை சந்தித்த முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுமதி மீறி போராட்டக்காரர்களை சந்தித்ததால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்களை சந்திப்பதற்காக தமிழிசை சௌந்தரராஜன் அங்கு சென்றார். அப்போது, அவரை தடுத்து நிறுத்திய காவல்துறை, போராட்டக்காரர்களை சந்திக்க அனுமதி இல்லை என்று கூறியுள்ளது. ஆனால், அவருடன் வந்த பாஜக தொண்டர்கள் காவல்துறையினரை மீறி, தமிழிசையை போராட்டக்காரர்களை சந்திக்க வைத்ததாக கூறப்படுகிறது.
காவல்துறையின் அறிவுறுத்தலை மீறி, போராட்டக்காரர்களை சந்தித்த காரணத்தால், தமிழிசை சௌந்தரராஜன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.