வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் கட்சியால் பகிரப்பட்ட ஒரு காணொளி 'செயற்கை நுண்ணறிவால்' உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தில் "பிஹார் மக்களைத் தவறாக வழிநடத்தும் ஒரு முயற்சி" என்று காங்கிரஸ் காணொளியை குற்றம் சாட்டியுள்ளது. பிஹார் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, சட்டபூர்வமாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படுவதாகத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட துணைப்பிரிவு மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஆகியோரால் வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன என்றும், 90,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் உள்ள அனைத்து வாக்காளர்களும் இதில் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் உட்பட பிஹாரில் அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.